search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு"

    காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டத்திற்கு எதிரான பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #SC #Article35A
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் இங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த 35ஏ சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

    பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவுக்கு ஆதரவாகவும் காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இன்றும் போராட்டம் தொடர்கிறது.

    இதனால் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் பகவதிநகர் முகாமில் இருந்து யாத்ரீகர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இன்றைய விசாரணையின்போது 35ஏ சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்குவது தொடர்பாக உத்தரவு ஏதேனும் பிறப்பித்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன. #SC #Article35A
    ×